CINEMA
62 வயது பழங்குடி பெண்மணிக்கு தேசிய விருது.. எதற்கு தெரியுமா?
62 வயது பழங்குடி பெண்மணியான கேரளாவைச் சேர்ந்த நஞ்சம்மாளுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுமா?
கடந்த 2020 ஆம் ஆண்டு பிரித்விராஜ், பிஜூ மேனன் ஆகியோரின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. “இருவருக்குமிடையே இருக்கும் பழி வாங்கும் எண்ணம்” என்ற சாதாரண ஒற்றை மையத்தை கொண்டு மலையாள திரைப்படங்களின் பாணியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
“அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “களக்காத்த” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அப்பாடல் ஒலிக்காத இடமே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த பாடல் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தது.
அப்படிப்பட்ட “களக்காத்த” என்ற பாடலை பாடியவர் தான் 62 வயது பழங்குடி பெண்மணியான நஞ்சம்மா. இவர் கேரளாவின் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி பாடகர் ஆவார். இவரின் வித்தியாசமான குரல் அப்பாடலை எங்கோ கொண்டு சென்றது.
இந்நிலையில் தற்போது இப்பாடலுக்கும் இவருக்கும் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது இப்பாடல் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது நஞ்சம்மாக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது பிஜூ மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இத்திரைப்படத்தின் இயக்குனர் சாச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார் என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
62 வயது பின்னணி பாடகிக்கு தேசிய விருது அறிவிப்பட்டது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
