CINEMA
மைக் மோகன் ரிட்டன்ஸ்: “ஹரா” படத்தின் புதிய Glimpse!
பிரபல நடிகர் மோகன் நடிப்பில் உருவாகி வரும் “ஹரா” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
எண்பதுகளில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மோகன். அவரின் பல படங்கள் சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்தன. அப்போதைய இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர்.
இவர் திரைப்படத்தில் பெரும்பாலும் இளையராஜாவே இசையமைப்பார். மோகன்-இளையராஜா காம்போ இப்போதும் பிரபலமான ஒன்று. மோகன் பாடல்களுக்கு இப்போதும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
அவர் திரைப்படத்தில் மைக் பிடித்து பாட ஆரம்பித்தால் போதும், ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். மைக்கை பிடித்துக்கொண்டு அவர் ஆடும் நடனத்தை ரசிக்காதவர்களே இல்லை. மைக்கை தனது தனித்துவ அடையாளமாக மாற்றியதால் அவருக்கு ரசிகர்கள் “மைக் மோகன்” என்ற செல்லப் பெயரை சூட்டினர்.
வெகு ஆண்டுகள் கழித்து “ஹரா’ என்ற திரைப்படத்தில் மைக் மோகன் கதாநாயகனாக நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இந்நிலையில் தற்போது மைக் மோகன் நடித்த “ஹரா” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளிவந்துள்ளது.
எண்பதுகளில் பார்த்த மைக் மோகன் போலவே அதே இளமையோடு இருக்கிறார். முகத்தில் தாடி வைத்து ஸ்டைலாக கண்ணாடி அணிந்து ஆளே டெரர் ஆக காட்சித் தருகிறார். கிளிம்ப்ஸில் அவரது தோரணையை பார்க்க கேங்க்ஸ்டர் போல் தெரிகிறது. ஆக்சனில் மாஸ் காட்டுகிறார்.
இத்திரைப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியிருக்கிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு “பவுடர்” என்ற திரைப்படத்தை இயக்கியவர். மேலும் இத்திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். லியாண்டர் லீ மார்ட்டி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோ தினகரன் , ப்ரகத் முனியசாமி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.