HOLLYWOOD
“சிலந்தி மனிதனுக்கு சிறப்பு விருது”… விருதுகளை அள்ளி குவிக்கும் சூப்பர் ஹீரோக்கள்
ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்த டாம் ஹாலண்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸில் ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தில் கலக்கி வருபவர் டாம் ஹாலண்ட். இவர் அமெரிக்காவின் பிரபல டிவி ஷோக்களில் நடித்துள்ளார். மேலும் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப்படமான “கேப்டன் அமெரிக்கா:சிவில் வார்” திரைப்படத்தில் தான் முதன் முதலாக ஸ்பைடர் மேன் ஆக அறிமுகம் ஆனார். மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் ஸ்பைடர் மேன் வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
மேலும் “ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்” , “அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்”, “அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்”, “ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்” போன்ற திரைப்படங்களில் ஸ்பைடர் மேன் ஆக காட்சித் தந்து பார்வையாளர்களை அசரவைத்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படம் வெளியானது. அத்திரைப்படமும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் உலகப் பிரபலமான எம் டி வி அவார்டு இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. அவ்விழாவில் ஹாலிவுட்டின் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த நடிகருக்கான எம் டி வி விருது “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படத்திற்காக டாம் ஹாலண்டிற்கு வழங்கப்பட்டது. அதே போல் ஷோக்களில் சிறந்த நடிகைக்கான எம் டி வி விருது நடிகை சென்டயாவிற்கு “யூஃபோரியா” என்ற வெப் சீரிஸிற்காக வழங்கப்பட்டது. இவர் “ஸ்பைடர் மேன்” வரிசை திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதே போல் சிறந்த ஹீரோவிற்கான விருது “பிளாக் விடோவ்” திரைப்படத்திற்காக ஸ்கார்லட் ஜோகான்சனிற்கு வழங்கப்பட்டது. மேலும் அவ்விழாவில் பல விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் மார்வெல் திரைப்பட நடிகர்கள் மூவரும் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.