REVIEW
“கூகுள் குட்டப்பா”.. என்னப்பா ஆச்சு…
கே. எஸ். ரவிக்குமார், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோரின் நடிப்பில் உருவான “கூகுள் குட்டப்பா” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழில் அறிவியல் அதிபுனைவு திரைப்படம் என்றால் அது எந்திரன் தான். டைம் டிராவல், ஸ்பேஸ் டிராவல் என பல வகையறாக்களில் திரைப்படங்கள் வந்திருந்தாலும் ரோபோ என்று சொன்னாலே எந்திரன் என்ற பிரம்மாண்டம் தான் நினைவில் வரும். எனினும் பிரம்மாண்டம் என்றில்லாமல் யதார்த்த கதைகளத்தில் “ரோபோ” கான்செப்ட்டை ஒரு மெலோ டிராமா வகையறாவில் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான அமைந்த திரைப்படம் மலையாளத்தில் வந்த “ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்”.
இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இன்று வெளியான “கூகுள் குட்டப்பா”. இதனாலேயே இத்திரைப்படத்திற்கு ரெஸ்பான்ஸ் எகிறியிருந்தது. ஆனால் படமோ நமக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.
கோவையில் தந்தைக்கு ஒரே மகனாக இருக்கும் இன்ஜினியர் இளைஞனுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசை மலர்கிறது. ஆனால் தந்தைக்கு அதில் விருப்பமில்லை. எப்படியோ தந்தையை சமாதானப்படுத்திவிட்டு ஜெர்மனிக்கு செல்கிறார். ஊரில் தந்தைக்கு துணையாக தனது ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் ரோபோ ஒன்றை கொடுக்கிறார். ஆரம்பத்தில் அதை வெறுக்கும் தந்தை ஒரு கட்டத்தில் ரோபோவை தனது மகனாகவே பாவித்துக் கொள்கிறார்.
ரோபோவோடு பாசப்பிணைப்பாக தனது நாட்களை செலவழிக்கிறார். ஒரு நாள் மகன் பணியாற்றும் நிறுவனம் ரோபோவை திரும்ப கேட்கிறது. ஆதலால் மகன் தந்தையிடம் ரோபோவை திரும்ப கேட்கிறார். தந்தையோ தர மறுக்கிறார். மகன் தந்தையிடம் இருந்து ரோபோவை வாங்கிக்கொண்டு செல்கிறாரா இல்லையா என்பது தான் கதை.
தந்தை கதாப்பாத்திரத்தில் கே. எஸ். ரவிக்குமார் ஜொலிக்கிறார். ரோபோவை மகனாக பாவித்த பிறகு மகனிடம் கொண்ட பாசத்தை ரோபோவிடம் காட்டும் காட்சிகள் அனைத்தும் நம்மை நெகிழ வைக்கிறது. ஆனால் மகனாக நடித்த தர்ஷன் நடிப்பில் பாஸ் மார்க் வாங்க கூட தவறிவிடுகிறார். கதாநாயகியாக வரும் லாஸ்லியா தனது சிரிப்பால் நடிகர்களை கவர்கிறார். நடிப்பில் ஓரளவு ஸ்கோர் செய்கிறார்.
படத்தின் பெரும் பின்னடைவாக அமைந்திருப்பது திரைக்கதை தான். ஒரு மெலோ டிராமா என்ற உணர்வையே பார்வையாளர்களுக்கு கடத்தவில்லை. ரோபோவுக்கும் தந்தைக்குமான சில காட்சிகள் நன்றாக அமைந்திருக்கின்றன. யோகி பாபு, பூவையார் போன்றோர் இருந்தும் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.
படத்தின் திரைக்கதை தொய்வாக இருப்பதால் நகைச்சுவை அதை முந்திக்கொண்டு “ஸ்ப்ப்பா” என்றவாறு உணரவைக்கிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். அர்வியின் ஒளிப்பதிவு சுகம். பிரவீனின் படத்தொகுப்பு படத்திற்கு ஏற்றார் போல் அவரும் தன் பணியை நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் இயக்குனர் சபரி-சரவணன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். மொத்ததில் “கூகுள் குட்டப்பா” கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல “கெட்டப்” ஆக வந்திருக்கும்.
