CINEMA
கண் மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்த கே ஜி எஃப் இயக்குனர்.. நெட்டிசன்கள் பாராட்டு மழை
கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது தந்தை பிறந்த சொந்த கிராமத்தில் கண் மருத்துவமனை அமைப்பதற்கு நிதியுதவி அளித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “கே ஜி எஃப்” திரைப்படம் யாரும் எதிர்பார்த்திரா வகையில் வேற லெவல் ஹிட் அடித்தது. தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.
“கே ஜி எஃப்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு “கே ஜி எஃப்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ராட்சசன் போல் வெளிவந்தது “கே ஜி எஃப் 2” திரைப்படம். “கே ஜி எஃப்” முதல் பாகத்தை தூக்கி சாப்பிடும் வகையில் மாஸ் என்டெர்டெயினராக ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியது என்று கூட சொல்லலாம்.
“கே ஜி எஃப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தது நடிகர் யாஷ் மட்டுமல்ல, அத்திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலும் தான். அந்த அளவுக்கு பிரசாந்த் நீலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தன. இந்திய சினிமாவே பிரசாந்த் நீலை திரும்பி பார்த்தது. குறிப்பாக பாலிவுட் இயக்குனர்கள் வாயடைத்துப்போயினர்.
இந்த நிலையில் தற்போது பிரசாந்த் நீல், ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீலகண்டபுரம் கிராமத்தில் கண் மருத்துவமனை அமைப்பதற்காக ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். இக்கிராமம் பிரசாந்த் நீலின் தந்தை பிறந்த கிராமம் என கூறப்படுகிறது. இச்செய்தி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் இயக்குனரின் பெருந்தன்மையான மனதை பாராட்டி வருகின்றனர்.
பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து “சலார்” என்ற திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.