CINEMA
உலக நாயகனுடன் இணையும் நவரச நாயகன்.. மாஸ் அப்டேட்..
கமல் ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
80களில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நவரச நாயகன் கார்த்திக். தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அவரின் வசீகரமான குரல் பலரையும் கட்டிப்போட்டது. இப்போதும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளிடையே பிரபலமான குரலாக அவரது குரல் திகழ்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக திகழ்ந்த இவர் ரஜினி, அஜித், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவர் கமல் ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை.
இந்நிலையில் கமல் ஹாசனுடன் “இந்தியன் 2” திரைப்படத்தில் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்!
“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலத்திற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் பணியாற்றிய மூவர் இறந்து போயினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் அத்திரைப்படத்தில் கமலுடன் முதன்முதலாக இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்து போனார். மேலும் “இந்தியன்” திரைப்படத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் மறைந்து போனார்.
இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விவேக் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக தான் கார்த்திக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
“இந்தியன் 2” திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிரூத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.