CINEMA
“கன்னியாகுமரி உங்களுக்கு , காஷ்மீர் எங்களுக்கு”.. வட இந்தியா, தென் இந்தியா குறித்த கேள்விக்கு கமலின் பதில்..
“விக்ரம்” திரைப்படத்திற்காக டெல்லியில் கமல் அளித்த பேட்டியில் தென் இந்தியா வட இந்தியா குறித்து சுவாரசியமான பதில் ஒன்றை கூறியுள்ளார்.
சமீபத்தில் “கே ஜி எஃப்”, “RRR” போன்ற பேன் இந்திய திரைப்படங்கள் தென் இந்தியாவில் எடுக்கப்பட்டு இந்தியா முழுவதும் பெற்று வெற்றி பெற்றது. இவ்வாறு தென்னிந்தியாவில் இருந்து சென்று வட இந்தியாவில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் இருந்தாலும் சமீப காலமாக பேன் இந்திய திரைப்படங்கள் குறித்தான வருகை அதிகரித்துள்ளது.
இதனிடையே தென் இந்தியா வட இந்தியாவிற்கு நடுவே ஒரு போட்டி இருப்பதாகவும், வட இந்தியர்கள் தென் இந்திய சினிமாக்களை ஏளனம் செய்கிறார்கள் எனவும் இணையத்தில் சர்ச்சைகள் பல கிளம்பின.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் “விக்ரம்” திரைப்படம் குறித்து விளம்பரம் செய்வதற்காக கமல் அங்கே சென்றுள்ளார். அங்கே பத்திரிகையாளர்கள் பேட்டியில் நிருபர் ஒருவர் தென் இந்தியா-வட இந்தியா விவகாரம் குறித்து கமலிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த கமல் “நான் ஒரு இந்தியன், என்னை பொறுத்தவரை தாஜ் மகால் என்னுடையது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது. கன்னியாகுமரி உங்களுக்கு சொந்தம், காஷ்மீர் எங்களுக்கு சொந்தம்” என தேசிய நலனுடன் பதில் சொல்லியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
“கே ஜி எஃப்”, “RRR” போன்ற திரைப்படங்கள் உலகளவில் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது “தங்கல்” போன்ற பல ஹிந்தி திரைப்படங்களின் வசூலை முறியடித்துள்ளது. ஆதலால் தென் இந்தியா வட இந்தியா திரைப்பட ரசிகர்களுக்கு இடையே சில சர்ச்சைகளும் வாதங்களும் சமீப காலமாக கிளம்பியுள்ளதாக அறியப்படுகிறது.