CINEMA
கமல் ஹாசன் குரலில் தமிழக வரலாறு.. உலகமே திரும்பி பார்த்த மகத்தான சம்பவம்
நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழக வரலாறு மற்றும் பெருமைகள் குறித்தான வீடியோ நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் ஒளிபரப்பப்பட்டது.
செஸ் பிரியர்களிடம் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தான். அதன்படி 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கிட்டத்தட்ட 180 நாடுகள் பங்குபெறுகின்றன. அந்நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெறுகின்றனர். இந்தியாவில் இருந்து 30 பேர் பங்குபெறுகின்றனர். இந்த செஸ் போட்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் அவ்விழாவில் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது அந்த விழாவில் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் தமிழர்களின் வாணிப அறிவு, தமிழக அரசர்களின் பெருமை, தமிழ் பண்பாடு குறித்து பல காட்சிகள் அடங்கியிருந்தன. அக்காட்சிகளுக்கு பின்னணி குரலாக ஒலித்தார் நடிகர் கமல் ஹாசன். கமல் ஹாசனின் மொழி உச்சரிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அவ்விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் அனைவரையும் அந்த வீடியோ கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது.
