CINEMA
“என் கண்ணு வேணும் ன்னு கேட்டியாமே”…கௌதம் மேனனுடன் மீண்டும் இணையவுள்ள கமல் ஹாசன்?
கௌதம் மேனனுடன் கமல்ஹாசன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
கடந்த 2006 ஆம் ஆண்டு கமல் ஹாசன், கமலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார்.
“வேட்டையாடு விளையாடு” திரைப்படம் 2006 ஆம் ஆண்டின் மாஸ் ஹிட் ஆன திரைப்படம். விறுவிறுப்பாகவும் வித்தியாசமான திரைக்கதையோடும் பார்வையாளர்களை பெரிதாக கவர்ந்த திரைப்படம். இப்போதும் இத்திரைப்படத்தை ரசிப்பவர்கள் பல பேர் உண்டு.
குறிப்பாக “வேட்டையாடு விளையாடு” என்ற பெயரை கேட்டாலே நமக்கு ராகவன் ஐபிஎஸ் என்ற கதாப்பாத்திரமும் “என் கண்ணு வேணும் ன்னு கேட்டியாமே” என்ற வசனமும் தான் நியாபகம் வரும். இப்போது வரை தமிழ் சினிமாவில் டாப் போலீஸ் ஸ்டோரி என்று அறியப்படும் பட்டியலில் “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் நிச்சயம் இடம்பெறும்.
இதனிடையே கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வேற லெவல் கலெக்சனை அள்ளிக் கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் திரைப் பயணத்திலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் “விக்ரம்” வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசனை தயாரிப்பாளர் செவந்த் சேன்னல் மாணிக்கம் நாராயனன் நேரில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் அப்போது “வேட்டையாடு விளையாடு” பாகம் 2 குறித்து பேசியதாகவும், கமலும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தையும் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்குகிறார் என தெரிய வருகிறது.
கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து பா. ராஞ்சித்துடன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து தான் “வேட்டையாடு விளையாடு 2” தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.