CINEMA
தொடங்கியது “ஜிகர்தண்டா 2”… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்..
“ஜிகர்தண்டா 2” திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
“ஜிகர்தண்டா” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “ஜிகர்தண்டா 2” திரைப்படம் விரைவில் உருவாக உள்ளதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் “ஜிகர்தண்டா 2” திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தென்படுகிறது. விநாயகர் சிலைக்கு அருகில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த பதிவில் அவர் “Pre Production இன்று முதல் தொடங்குகிறது. வேறு சில குற்றங்களும் ஒரு கலையும்” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Happy Vinayagar Chathurthi 🪔🙏🏼
Pre Production from today… 😊#JigarThanda2 #ஜிகர்தண்டா2
வேறு சில குற்றங்களும்… ஒரு கலையும்..
Another Few Crimes & an Art… pic.twitter.com/XRAJyp5SeN
— karthik subbaraj (@karthiksubbaraj) August 31, 2022
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இத்திரைப்படம் தமிழின் மிக முக்கியமான கேங்கஸ்டர் திரைப்படங்களில் ஒன்று. இதில் கேங்கஸ்டராக நடித்திருந்த பாபி சிம்ஹா தனது அபார நடிப்பால் நம்மை அசர வைத்திருப்பார். இதில் சித்தார்த், லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம், கருணாகரன் ஆகிய பலரும் நடித்திருந்தனர்.
வித்தியாசமான திரைக்கதை அம்சத்தோடு வெளிவந்த இத்திரைப்படம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜின் திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் பல உதவி இயக்குனர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய திரைப்படமாக இருக்கிறது. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இத்திரைப்படத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்த நிலையில் தான் தற்போது “ஜிகர்தண்டா 2” திரைப்படத்தின் Pre Production பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
