CINEMA
ரணகளத்திலும் சாதனை படைக்கும் ஜெய் பீம்; மேலும் இரண்டு விருதுகள் அறிவிப்பு
சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு முக்கியமான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “ஜெய் பீம்”. இத்திரைப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஸா விஜயன், பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர், இளவரசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
குறிப்பாக ராஜாகண்ணுவாக நடித்திருந்த மணிகண்டன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் போலீஸிடம் அடிவாங்கும் காட்சிகள் அனைத்தும் படம் பார்த்தவர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது. சூர்யா வக்கீலாக சிறப்பாக நடித்திருந்தார் . இத்திரைப்படம் வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்தது.
இருளர் சமூக மக்களின் வாழ்வையும் அவர்களின் துயரத்தையும் யதார்த்தமாக இத்திரைப்படம் காட்சிப்படுத்தியது. அதிகார வர்க்கத்தின் மூலம் நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கும் வகையிலான கதையம்சம் ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியது. மேலும் இத்திரைப்படத்தை பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்.
இத்திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை பெறவுள்ளதாக அறிவிக்கிப்பட்டது. அதாவது சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதை பெறவுள்ளது. மேலும் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறவுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கிறது என ருத்ர வன்னியர் நிறுவன தலைவர் குற்றம் சாட்டினார். அதன் பேரில் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் தா.செ. ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர்களான சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை சைதாப்பேட்டை நீதிமன்றம் மே 20 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
இவ்வாறு சர்ச்சைகள் பல வந்த போதிலும் “ஜெய் பீம்” திரைப்படம் மேலும் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. போஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.