CINEMA
தமிழகத்துக்கு மீண்டும் பெருமை சேர்த்த ஜெய் பீம்.. மேலும் ஒரு அங்கீகாரம்
ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் விதமாக ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் உலகம் முழுவதும் பரவலாக பாராட்டைப் பெற்றது. இருளர் சமுதாயத்தின் மீது ஆதிக்க சக்திகள் செலுத்தும் வன்முறையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களால் பாரட்டப்பட்டது மட்டுமல்லாது சில சர்ச்சைகளையும் உண்டு செய்தது.
அதாவது திரைப்படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில குறியீடுகள் இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போர் கொடி தூக்கினர். அதன் பின் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் சூர்யாவையும் இயக்குனர் ஞானவேலையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. நடிகர் சூர்யா மற்றும் பிறர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்ப்பும் வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு போஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டது.
அதே போல் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் சூர்யாவுக்கு சிறந்த நடிகர் என்ற விருதும் லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் விதமாக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் “பெரிய நாயகி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
