REVIEW
“இரவின் நிழல்”… ஒரு உலக சினிமா… A Short Review
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் “இரவின் நிழல்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
பார்த்திபன் மிகப் பெரிய பணக்காரர், ஃபைனான்சியர். அவரை கொல்வதற்காக அவரது எதிரிகள் தேடி வருகின்றனர். அதற்கு முன் அந்த எதிரிகளை கொன்றுவிட வேண்டும் என துப்பாக்கி எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.
பார்த்திபன் கடந்த வந்த கரடு முரடு பாதைகள், அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள், அவர் எப்படி எல்லாம் அதனை எதிர்கொண்டு பணக்காரர் ஆனார் என்பது தான் கதை.
உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக இதனை உருவாக்கியதற்கு ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு பெரிய சல்யூட். இது ஒரு உலக சாதனையேதான்.
நந்துவாக வரும் பார்த்திபன் தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். Non Linear ஆக செல்லும் திரைக்கதையில் பார்த்திபனின் சிறுவயது மற்றும் இளமை கால கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நந்து வாழ்க்கையில் வந்த மூன்று கதாநாயகிகளான சினேகா குமாரி, பிரிகிடா சாகா, சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் பார்த்திபனின் கதாநாயகிகளாக மிளிர்கிறார்கள்.
போலி சாமியாராக வரும் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கொடுத்த பார்த்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தின் முதல் 30 நிமிடங்கள் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறது. இந்த அசாத்திய சாதனையை எப்படி செய்தார்கள்? எவ்வளவு தடங்களை கடந்து இந்த சாதனையை படைத்தார்கள்? என்பதை அந்த மேக்கிங் வீடியோ உணர்த்திவிடுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலமும் பிரம்மாண்டமுமாக அமைந்துள்ளது இசையும் ஒளிப்பதிவும் தான். இத்திரைப்படத்திற்கு தகுந்த தரமான உழைப்பை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும், ஒளிப்பதிவாளார் ஆர்தர் வில்சனும் கொடுத்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் இடம்பெரும் சில வல்காரிட்டி காட்சிகள் படத்திற்கு தேவைப்பட்டாலும் சில இடங்களில் சங்கடப்பட வைக்கிறது. திரைக்கதையில் சில இடங்களில் சொதப்பல் தெரிகிறது. ஆனாலும் இப்பெரும் உழைப்பிற்கு பின் இதெல்லாம் தூசியாய் பறந்து போகிறது.
திரைப்படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் பச்சையாக பேசப்படுவதாலும் வல்காரிட்டி காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலும் குடும்பமாக சென்று பார்க்கமுடியாது. எனினும் உலகத் தரமான திரைப்படத்தை கொடுத்து உலகத்தை தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்த பார்த்திபனுக்கு கிரேட் சல்யூட்…
