CINEMA
விஜய் மீது அபராதம் விதித்த வருமான வரித்துறை.. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
கடந்த 2015 ஆம் ஆண்டு வருமான வரித்துறை நடிகர் விஜய் மீது அபராதம் விதித்திருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “புலி”. இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அலுவலகம், வீடு மற்றும் தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புலி படக்குழுவினர் சுமார் ரூ. 25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருந்ததாக புகார் எழுந்தது. மேலும் நடிகர் விஜய் “புலி” திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் ரூ. 15 கோடியை வருமான வரித்துறையிடமிருந்து மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை 1.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதாவது நடிகர் விஜய் மீது ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவிற்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் தரப்பில் வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வருகிற செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குள் வருமான வரித்துறை பதில் கூறவேண்டும் எனவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் கூட விஜய்யின் சொகுசு கார் வழக்கில் நீதிமன்றம் “விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் முழுமையாக வரி செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.