CINEMA
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக்குக்கு பதில் நடிக்க உள்ள பிரபல நடிகர்..
“இந்தியன் 2” திரைப்படத்தில் விவேக்குக்கு பதிலாக நடிக்க உள்ள பிரபல நடிகர் இவர்தான்.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்றது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.
இந்த நிலையில் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இத்திரைப்படத்தில் முதலில் விவேக் நடித்திருந்தார். ஆனால் அவர் மறைந்த பிறகு அவரது கதாப்பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது.
இந்த நிலையில் தற்போது குரு சோமசுந்தரம் நடிப்பது உறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுடன் விவேக் இணைந்து நடித்த முதல் திரைப்படம் “இந்தியன் 2” என்பது குறிப்பிடத்தக்கது.
குரு சோமசுந்தரம் “ஜோக்கர்”, ஜிகர்தண்டா”, “குற்றமே தண்டனை”, “பேட்ட”, “மாறா’, “மின்னல் முரளி” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்துபவர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் கூட “விக்டிம்” என்ற Anthology திரைப்படத்தில் நடித்திருந்தார்.
“இந்தியன் 2” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.