CINEMA
வடிவேலுவை வைத்து காதல் படம் இயக்க ஆசைப்படும் கௌதம் மேனன்… சக்கரை பொங்லுக்கு வடகறியா?
இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றன.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் படங்கள் கிளிஷேவாக மாற ஆரம்பித்தனர். அதற்கு முக்கியக் காரணம் அவரின் கதாபாத்திரங்களும், கதைக்களனும் நகர்ப்புற உயர்நடுத்தர வர்க்கத்தை மட்டுமே பிரதிபலித்தன. இதனால் பெருவாரியான ரசிகர்களுக்கு அவரின் படங்கள் ஒரு அசூசையை உருவாக்கியது.
இந்நிலையில் இப்போது அவர் முதல்முதலாக சிம்பு நடிப்பில் இயக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அவரின் கம்ஃபோர்ட் ஸோனுக்கு வெளியே இயக்கும் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.
இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கௌதம் மேனன், அடுத்து சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் ஆகியோரை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் நடிகர் வடிவேலுவை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த படம் ‘ஒரு நகைச்சுவை மற்றும் காதல் படமாக இருக்கும் என்றும் வடிவேலுவால் அதை சிறப்பாக செய்ய முடியும்’ என்றும் கூறியுள்ளார்.
கௌதம் மேனனுக்கு நேர் எதிரான சினிமா பாணியைக் கொண்டவர் வடிவேலு. அவரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையிலும், மக்களின் வாழ்வில் பெறப்பட்டதாகவும் இருக்கும்.
இந்நிலையில் கௌதம் மேனனின் இந்த விபரீத ஆசை நிறைவேறுமா அப்படி நடந்தால் அந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.