CINEMA
சர்வதேச திரைப்பட விழாவில் கார்கி… மாஸ் காட்டும் சாய் பல்லவி
சாய் பல்லவி நடிப்பில் உருவான “கார்கி” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்பட உள்ளது.
சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் “கார்கி”. இதில் சாய் பல்லவியுடன் காளி வெங்கட், ஆர் எஸ் ஷிவாஜி, லிவிங்க்ஸ்டன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ் என பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், தாமஸ் ஜார்ஜ், கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.
“கார்கி” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சாய் பல்லவி மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என பலரும் பாராட்டினர். மேலும் சாய் பல்லவியுடன் நடித்த காளி வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
“கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை தமிழில் 2டி என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா வெளியிட்டிருந்தார்.
ஒரு சிறுமியிடம் அத்துமீறிய 4 பேரில் சாய் பல்லவியின் அப்பாவும் ஒருவர் என புகார் எழுகிறது. இதனை தொடர்ந்து தன் தந்தை அப்பாவி என்பதை நிரூபிக்க சாய் பல்லவி போராடும் கதையே “கார்கி”.
சாய் பல்லவி தற்போது இது போன்ற தனித்துவமான Bold ஆன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். “விராட பர்வம்”, “ஷாம் சிங்கா ராய்” போன்ற திரைப்படங்களில் சாய் பல்லவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் “கார்கி” திரைப்படம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அத்திரைப்படத்திற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.