CINEMA
ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.. துல்கர் பட இயக்குனர் சோகம்
ரஜினியை வைத்து இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என சோகமாக கூறியுள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.
துல்கர் சல்மான், ரக்சன், நிரஞ்சனி, ரீது வர்மா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி.
தனது முதல் திரைப்படத்திலேயே அசத்தலான ஹிட் கொடுத்து ரசிகர்களை “ஓ” போட வைத்தவர் இவர். சுவாரசியமான கதைச்சொல்லலில் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து பார்வையாளர்களை டிவிஸ்ட்டுகளால் திணறடித்தவர் இவர். மேலும் இத்திரைப்படத்தில் நடித்த நிரஞ்சனியை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். நிரஞ்சனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிங்கு பெரியசாமி ரஜினியை ஒரு முறை சந்தித்து பேசினார். அதில் இருந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. மேலும் ஒரு பக்கம் தேசிங்கு பெரியசாமி விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று “குருதி ஆட்டம்” திரைப்படத்தை சத்யம் திரையரங்கில் காண வந்திருந்த தேசிங்கு பெரியசாமி ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் “உங்களது அடுத்த திரைப்படம் குறித்து கூறுங்கள்?” என கேட்டபோது “ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும்” என கூறினார்.
மேலும் அவரிடம் “ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன. அது குறித்து கூறுங்கள்?” என கேட்டபோது “நான் முயற்சி செய்தேன். ஆனால் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதே போல் தான் விஜய்யை இயக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை” எனவும் கூறினார்.