REVIEW
தேஜாவு தேறுமா இல்லையா? A Short review..
அருள்நிதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள “தேஜாவு” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்…
சுப்ரமணி என்ற கதாசிரியர் தான் எழுதிய கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாக போலீஸில் புகார் கொடுக்கிறார். இதனை அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலீஸார். ஆனால் சுப்ரமணி தன் கதையில் எழுதி இருந்தது போல் ஒரு பெண்ணை மூன்று பேர் கடத்திச் செல்கின்றனர். அப்பெண் டி ஐ ஜி ஆஷாவின் மகள்.
இதனை தொடர்ந்து கதாசிரியர் சுப்ரமணியை போலீஸார் கஸ்டடியில் எடுக்கிறார்கள். மேலும் தன் மகள் கடத்தப்படவில்லை எனவும் ஆஷா பத்திரிக்கையாளர்களிடம் கூறுகிறார். இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட டி ஐ ஜியின் மகளை கண்டுபிடிக்க விக்ரம் என்ற ஸ்பெஷல் அண்டர்கவர் ஆஃபிசரை நியமிக்கிறார்கள். இறுதியில் ஆஃபிசர் விக்ரம் டி ஐ ஜியின் மகளை கண்டுபிடித்தாரா? சுப்ரமணி கதையின் முடிவு என்ன? என்பதே இத்திரைப்படத்தின் கதை.
அண்டர்கவர் ஆஃபிசராக வரும் அருள்நிதி தனது விரைப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். பல காலம் கழித்து சினிமாவில் தலைக்காட்டிய மதுபாலா, டி ஐ ஜி ஆஷாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். கதாசிரியர் சுப்ரமணியாக வரும் நடிகர் அச்யுத் குமார் தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் காளி வெங்கட், சேத்தன், ஸ்மிரிதி வெங்கட் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை தான் பெரிய பிளஸ். அப்படிப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றார் போல் ஈடுகொடுத்த இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையாவும் படத்தின் பெரிய பலம். அருள் ஈ சித்தார்த்தின் எடிட்டிங் பக்கா.
படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு தெரிவது ஒரு சிறிய மைனஸாக இருந்தாலும் திரைப்படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் த்ரில்லிங் காட்சிகளில் அந்த மைனஸை எல்லாம் மறக்க வைத்து பார்வையாளர்களை தனது காட்சிகளால் மிரட்டியுள்ளார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
மொத்தத்தில் தமிழில் வெளியான முக்கிய த்ரில்லர் படமாக ரசிகர்களின் மனதை வென்றுள்ளது “தேஜாவு”.
