CINEMA
“மங்காத்தா” ரிட்டர்ன்ஸ்..அஜித்துடன் அழகிரி மகன்; மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறாரா தயாநிதி??
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அஜித்துடன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
அஜித் நடிப்பில் தற்போது “அஜித் 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை அஜித்தின் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் மேற்கண்ட திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
“அஜித் 61” திரைப்படத்தின் அஜித் கெட் அப் பல நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “வலிமை” இயக்கிய ஹெச். வினோத்தே இத்திரைப்படத்தையும் இயக்கி வருவதால் ரசிகர்கள் இடையே எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி சமீபத்தில் அஜித்தின் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “சும்மாவா சொன்னங்க அல்டிமேட் ஸ்டார்ன்னு.. அவர் கூட இருந்தாலே எனர்ஜி லெவல் சொல்லில் அடங்காத வகையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கிளவுட் நயன் மூவீஸ் சார்பாக “தமிழ் படம்”, “தூங்கா நகரம்”, “மங்காத்தா”, “உதயம் NH4”, “தகராறு”, “வடகறி” போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் “வாரணம் ஆயிரம்”, “பையா”, “நான் மகான் அல்ல”, “ரத்த சரித்திரம்”, “வானம்”, “அழகர்சாமியின் குதிரை” ஆகிய திரைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதன் பின் திரைப்படத் தயாரிப்பை கிடப்பில் போட்டுவிட்டு அரசியல் பக்கம் ஒதுங்கினார். இந்நிலையில் தற்போது அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆதலால் “மங்காத்தா” என்ற வெற்றித் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் தயாநிதி அழகிரி இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளாரா? என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன.
View this post on Instagram