TELEVISION
“சித்ராவின் கணவர் என்னை மிரட்டுகிறார்”.. ஹேமந்தின் நண்பர் திடுக்கிடும் புகார்
சித்ராவின் கணவர் ஹேமந்த் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அவரின் நண்பர் நீதிமன்றப்படிகளை ஏறியுள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. இந்நிலையில் நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவர் ஹேமந்தை போலீஸார் கைது செய்தனர். எனினும் அதன் பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார் ஹேமந்த்.
இதனை தொடர்ந்து ஹேமந்த் சித்ராவை கொடுமைப்படுத்தியதாக பலரும் சாட்சி அளித்தனர். அதில் ஹேமந்தின் நண்பர் சையத் ரோஹித்தும் ஒருவர். இந்நிலையில் தனக்கு எதிராக சாட்சி சொன்னதாக சையத் ரோஹித்திற்கு ஹேமந்த் கொலை மிரட்டல் விடுவதாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளாராம்.
அந்த மனுவில் ஹேமந்த் பண அதிகாரத்தையும் தனது அடி ஆட்களைக் கொண்டும் தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் எனவும் இதனால் தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்பட உள்ளதாகவும் கூறியுள்ளாராம்.
மேலும் அதில் ஹேமந்த் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஹேமந்த் ஜாமீனை ரத்து செய்யவில்லை என்றால் அவருக்கு எதிரான சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் கூறியுள்ளாராம். இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் சித்ராவின் தோழி ரேகா, சித்ராவின் கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என கூறி வந்தார். இந்நிலையில் ஹேமந்த் தனக்கு எதிராக சாட்சி சொன்ன தனது நண்பரையே மிரட்டுவதாக செய்திகள் வெளிவருகின்றன.