CINEMA
சிகரெட் பிடித்ததால் வசமாக சிக்கிய தனுஷ்… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா?
தனுஷ் புகைப்பிடித்தது போல் நடித்த காட்சிக்கு பாய்ந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “வேலையில்லா பட்டதாரி”. இத்திரைப்படத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் தனுஷ் அடிக்கடி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும். இதனை தொடர்ந்து இத்திரைப்படம் வெளியான அதே ஆண்டில் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பாக “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் முறையாக இடம்பெறவில்லை எனவும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை படக்குழு மீறியுள்ளதாகவும் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரை விசாரித்த சுகாதாரத் துறை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனை தொடர்ந்து நீதிமன்றம் இருவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து விசாரணைக்கு தடை விதிக்குமாறும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் மேலும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் தனுஷ் அளித்த மனுவிற்கு இன்று தீர்ப்பு வந்துள்ளது.
அதாவது தனுஷ் இந்த புகாரின் அடிப்படையிலான விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த புகாரின் அடிப்படையிலான விசாரணையை வரும் 10 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.