CINEMA
“சிவாஜி பார்ட் 2 க்கு நான் ரெடி..” ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏ வி எம்
“சிவாஜி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏ வி எம் அருணா குகன் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏ வி எம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் “சிவாஜி”. இத்திரைப்படம் ரஜினிகாந்த் சினிமா கேரியரிலேயே முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் ஏ வி எம் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ஏ வி எம் நிறுவனம் “அயன்”, “வேட்டைக்காரன்”, “முதல் இடம்”, “இதுவும் கடந்து போகும்” போன்ற திரைப்படங்களை தயாரித்தது. ஆனால் அதன் பின் எங்கும் தென்படவில்லை.
இந்த நிலையில் தற்போது வெப் சீரீஸ் மூலம் தனது கம் பேக்கை கொடுத்துள்ளது ஏ வி எம் நிறுவனம். அருண் விஜய், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்” என்ற வெப் சீரீஸை ஏ வி எம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரீஸ் வருகிற 19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது. இதனை அறிவழகன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “ஈரம்”, “வல்லினம்”, “ஆறாது சினம்”, “குற்றம் 23”, “பார்டர்” போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ வி எம் அருணா குகன் “சிவாஜி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசினார். அதாவது “சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கு நல்ல கதையும், நல்ல ஸ்கிரிப்ட்டும் வேண்டும். நல்ல கதையோடு யாராவது வந்தால் நிச்சயம் சிவாஜி 2 ரெடி தான்” என கூறினார்.