CINEMA
ஏ. ஆர். ரகுமான் வீட்டு திருமணம்: கலைஞர்கள் வாழ்த்து மழை…
ஏ. ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமானின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர், ஆஸ்கார் நாயகன் என்று பெயர் பெற்றவர் ஏ. ஆர். ரகுமான். அவருக்கு கதிஜா ரகுமான், ரஹீமா என இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கதிஜா ரகுமானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸுதின் ஷேக் முகமதுக்கும் நிச்சயதார்தம் நடந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இத்திருமணத்திற்கு தனது நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே ஏ. ஆர். ரகுமான் அழைப்பு விடுத்திருந்ததாக தெரிய வந்துள்ளது. ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணமக்களுடன் அவரும் அவரது மனைவி சயிரா பானு மற்றும் அவரது மற்ற இரண்டு பிள்ளைகளான ரஹீமா, அமீன் ஆகியோருடன் மணமேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் சமீபத்தில் மறைந்த ஏ. ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகமின் உருவப்படம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
ஏ. ஆர். ரகுமானை போல் கதீஜா ரகுமானும் இசை ஆர்வம் உள்ளவர். எந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற “புதிய மனிதா” பாடலில் அவர் குரலும் இடம்பெற்றிருந்தது. மேலும் அவரது குரலில் “குஹூ குஹூ” என்ற தனிப்பாடலும் வெளிவரவுள்ளதாக சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏ. ஆர். ரகுமான் அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து கதீஜா ரகுமானுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் “மணமக்கள் இருவரையும் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும், மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும் கதிஜா ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் , தனது கணவர் ரியாஸுதினுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “என் வாழ்நாளில் நான் வெகுநாள் காத்திருந்த தருணம் இது” எனவும் குறிப்பிட்டிருந்தார். கதீஜா ரகுமான் திருமணத்திற்கு ஷ்ரேயா கோஷல், நீத்தி மோகன் ஆகிய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
