TELEVISION
“அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடு”.. எனக்கே தெரியாம எனக்கு ஒரு வீடு இருக்கா? பங்கமாய் கலாய்த்த நிஷா
அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடு என ஒரு பெரிய பங்களாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து பங்கமாய் கலாய்த்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அறந்தாங்கி நிஷா.
சின்னத்திரை ஆனாலும் சரி வெள்ளித் திரை ஆனாலும் சரி, பெண் நகைச்சுவை கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த நிலையில் சின்னத் திரை மூலம் காமெடியில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.
விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டான்ட் அப் காமெடி கலைஞராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்ட இவர் தனது நகைச்சுவை உணர்வால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இதனிடையே “கோலமாவு கோகிலா”, “மாரி 2”, “கலகலப்பு 2” போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” முதல் சீசனை தொகுத்தும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து “பிக் பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குகொண்டார். சமீப நாட்களாக அறந்தாங்கி நிஷா ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது.
இந்த நிலையில் இதனை பங்கமாய் கலாய்த்து அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “அதெப்படிப்பா எனக்கே தெரியாமல் நான் பங்களா கட்டிக்கொள்வேன். பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா. இந்த செய்தியை பார்த்துவிட்டு பலரும் எனக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். பலரும் கிண்டல் செய்தும் வந்தனர்.
இந்த செய்தி வெறும் வதந்தி தான். ஆனால் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. சீக்கிரமாக இப்படி ஒரு பங்களா கட்டுவோம். சத்தியமாக சொல்கிறேன். இது என் வீடு இல்லை” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.