CINEMA
மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்… அடிபொலி..
மலையாள சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். எந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்? யார் அந்த முன்னணி நடிகர் என்று தெரியுமா?
தமிழ் திரைப்பட இசை உலகில் ராக்ஸ்டாராக திகழ்பவர் அனிருத். அனிருத் இசையமைத்த முதல் படமான “3” திரைப்படத்தின் ஆல்பமே உலக மகா ஹிட் அடித்தது. அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வொய் திஸ் கொல வெறி” பாடல் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மியூசிக் வீடியோவாக அறியப்பட்டது.
அதன் பின் தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறிப்போனார் அனிருத். ரஜினி , கமல், விஜய், அஜித் என தமிழின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இது பாலிவுட்டில் அனிருத் இசையமைக்கும் முதல் திரைப்படமாகும். இந்த நிலையில் அனிருத் மலையாள சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நிவின் பாலி நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். மலையாள திரை உலகின் பிரபல இயக்குனரான ஹனீஃப் அதேனி இத்திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹனீஃப் அதேனி இதற்கு முன் “மைக்கேல்”, “தி கிரேட் ஃபாதர்” போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
அனிருத் சமீபத்தில் “டான்”, “விக்ரம்”, “திருச்சிற்றம்பலம்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதோ”, “தாய் கிழவி” போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
