CINEMA
“என்னுடைய கணவருக்கு மட்டும் அப்படி ஒன்று கிடைத்திருந்தால்”… கண் கலங்கும் மீனா
நடிகை மீனா, உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தனது கணவர் குறித்த ஒரு கவலையான பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீனா சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர். குறிப்பாக மீனா “அன்புள்ள ரஜினிகாந்த்” திரைப்படத்தில் “ரஜினி அங்கில்” என ரஜினியிடம் ஓடிவரும் காட்சி மிகவும் பிரபலமான காட்சியாகும்.
தமிழில் ராஜ்கிரண் நடித்த “என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஜொலித்தார் மீனா. தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், கார்த்திக், அர்ஜூன் என பலருடனும் ஜோடியாக நடித்த மீனா காலப்போக்கில் தமிழின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
இதனிடையே நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல் நிலை மோசமானதின் காரணமாக கடந்த ஜூன் மாதம் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மீனாவிற்கு தமிழ் திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மீனா, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்றும் வகையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு உயிரை காப்பாற்றுவதை விட நல்ல விஷயம் வேறெதுவும் கிடையாது. உடல் உறுப்பு தானம் ஒன்றே அதற்கான சிறந்த வழி.
மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்களை உடைய நபர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். எனது கணவர் சாகருக்கு யாராவது தானம் செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கும். ஒரு டோனர் எட்டு உயிர்களை காப்பாற்றலாம்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனது உடல் உறுப்புகளை தானம் செய்வேன் என இன்று நான் உறுதி மொழி ஏற்கிறேன்” என கூறியுள்ளார்.
View this post on Instagram